கையறுநிலை, இலக்கணம்
தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை என்று எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ்ப்பேரகராதி பொருள் அளிக்கிறது. மறைந்தோர் பொருட்டு அவர்களின் உற்றார் அடையும் துயர்நிலை. ‘கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்’ என்று தொல்காப்பிய வரையறையை பேரகராதி அளிக்கிறது.
புறப்பொருள் வெண்பா மாலை கையறு நிலைக்கு இரண்டு வரையறைகளை அளிக்கிறது
- ‘செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று’ என்னும் வரியில் கழலணிந்த மன்னன் மாய்ந்தபோது அவனைச்சேர்ந்தவர் செய்வதறியாது துயருறுதல் கையறுநிலை என்னும் வரையறை உள்ளது.
- ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன’ என்னும் புறப்பொருள் வெண்பா மாலை வரி மறைந்தவனின் புகழை பெருந்துயருடன் எடுத்துரைப்பதும் கையறுநிலையே என வரையறை செய்கிறது.
ஆனால் கையறு நிலை என்பது கைவிடப்பட்ட நிலை, துயருற்ற நிலை என்னும் பொருளிலும் சங்கப்பாடல்களில் கையாளப்படுகிறது. ’காலையும் பகலும் கையறு மாலையும்’ என்று அள்ளூர் நன்முல்லை எழுதிய குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.
Comments
Post a Comment